ராஜபாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, அவசர சிகிச்சை மற்றும் உயிர் காக்கும் உபகரணங்கள் வாங்க ரூ.43 லட்சமும், உயர்தர ஆய்வக உபகரணங்களுக்கு ரூ.4 லட்சமும், கண் சிகிச்சை உபகரணங்களுக்கு ரூ.60 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இதய பரிசோதனை கருவிகள் வாங்க ரூ.3 லட்சமும், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்களுக்கு ரூ.34 லட்சமும், ஒருங்கிணைந்த அவசர மகப்பேறு பராமரிப்பு மையங்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க ரூ.22 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஜமீன் கொல்லங்கொண்டான், கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட ராஜபாளையம் பகுதியில் உள்ள 19 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த ரூ.2.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம் மருத்துவமனைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள், சிகிச்சை வசதிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.

